2012-02-04

  சுதந்திர இலங்கையின்

சுதந்திர இலங்கையின்

சுபீட்சமிகு எதிர்காலம் நோக்கி....

நாடு சுதந்திரமடைந்து 64 வது ஆண்டில் தடம் பதிக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றை மீட்டிப் பார்த்தால் 2005ம் ஆண்டு வரையிலான காலகட்டம் அதற்குப் பின்னரான ஏழு வருடகாலம் என்ற வித்தியாசத்தைக் காணலாம். சகல இன, சமூக மக்களும் பயம் சந்தேகமின்றி நாட்டில் எங்கும் சென்று வரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காணக்கூடிய சூழ்நிலை நாட்டில் தற்போது நிலவுகிறது.

இத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கும் அதனைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் பலமான அரசாங்கம் துணிச்சல் மிக்க தலைமைத்துவமும் காரணமாகிறது. இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், சர்வதேச எரிபொருள் விலையேற்றம் உலக உணவு நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்ட முன்னேற்றகரமான திட்டங்கள் நாட்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை வியப்பைத் தருகின்றன.

எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தின் தயவை நாடும் நிலை குறைவடைந்து எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற யுகம் உருவாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு துறைகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் செல்லும் பிரதான வீதிகள் ‘காபட்’ போடப்பட்டு பயணத்தின் பாதி நேரத்தை மீதப்படுத்துகின்றன. அதேபோன்று பிரதேச பாதைகள், கிராமிய பாதைகள் ‘கொங்கிரீட்’ போடப்பட்டு கிராமிய மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளும் அவர்கள் தமது

உற்பத்திகளை இலகுவாக கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்குமான வசதிகள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

யுத்தம், இயற்கை அனர்த்தம் என பெரும் பாதிப்புகளைச் சந்தித்து பின்னடைவைக் கண்ட நாடுகள் மீண்டும் தலை தூக்குவதற்குக் குறிப்பிட்ட காலகட்டமொன்று தேவைப்படும். இதற்கு உதாரணமாக பல நாடுகளை குறிப்பிட முடியும்.

எனினும் யுத்தமும் சுனாமியும் ஏற்படுத்திய பாதிப்புக்களை குறுகிய காலத்தில் சரி செய்து அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு துணிச்சலும் தூரதிஷ்டியும் கொண்ட தலைமைத்துவம் அவசியம். அத்தகைய தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வருகிறார்.

தாய் நாட்டை நேசிக்கும் தலைவராக அதேவேளை, தாய் நாட்டின் மீது பற்றுறுதியுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் தலைவராக அவர் நிகழ்கிறார்.

2005ம் ஆண்டு இந்த நாடு ஜனாதிபதியினால் பொறுப்பேற்கப்படும்போது பாரிய பின்னடைவைக் கொண்டிருந்தது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு உரித்தற்றதாக இருந்தது. பெருமளவிலான வளங்களைக் கொண்ட கடற்பரப்பு, விவசாயக் காணிகள் என்பன வேறு ஒரு நிர்வாகத்திடம் அகப்பட்டிருந்தது.

மனிதாபிமான யுத்தத்தின் மூலம் சகல வளங்களும் மீட்கப்பட்டு பின்னடைவுகள் சரி செய்யப்பட்டன. நாட்டின் முக்கிய நெல் உற்பத்திப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் விவசாயம் செய்யப்படாமலிருந்து சகல காணிகளும் மீண்டும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அரிசியில் தன்னிறைவு காணும் நாடாக மீண்டும் இலங்கையைப் பார்க்க முடிகிறது.

அரச துறை வீழ்ச்சியடைந்து தனியார் துறை அதை மேவும் யுகமொன்றிருந்தது. அன்றைய ஆட்சியாளர்களும் அதில் அக்கறை காட்டாது அரச துறை வீழ்ச்சியடையும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர்.

அரச துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றது மட்டுமன்றி அரச துறையினரின் எண்ணிக்கையை ஆறு இலட்சமாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவு அரச துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது. இந்த அபாயகரமான நிலையிலிருந்து அரச துறையை பாதுகாத்து புத்துயிரூட்டிய பெருமை இன்றைய அரசாங்கத்தையே சாரும்.

வரலாற்றில் முன்னெப்போது மில்லாதவாறு இலட்சக்கணக்கானோர அரச துறைகளின் பல்வேறு பிரிவுகளுக்கும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அரச துறையில் பதின்மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோர் கடமையில் உள்ளனர்.

நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டுமென்றால் அடிமட்டத்திலிருந்து அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை இன்றைய அரசாங்கம் நன்கு உணர்ந்து செயற்படுகிறது. முதலில் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அதற்குத்தகுந்ததாக கிராமிய பொருளாதாரத்தையும் சமூக பொருளாதாரத்தையும் முன்னேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

‘திவி நெகும’ குடும்ப பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலும், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு மிலியன் குடும்பங்கள் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு தலா 10,000 ரூபாவிற்கான தொழில் உபகரணங்கள் விதை மற்றும் உர வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றமடைவதுடன் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. அதனை சாதகமாக்கிக் கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் மின் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இத்தகைய செயற்பாடுகளுக்கு பெரும் எதிர்ப்புகள் உருவாகின. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துணிச்சலுடன் அதனை நிறைவேற்ற முனைந்தார். மக்கள் ஆதரவு தாமாகவே வந்தது.

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உரமானியம் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக வரிக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்று தசாப்தகால யுத்தத்துக்குப் பின் பின்தங்கியிருந்த அபிவிருத்திகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தமது அமைச்சின் கீழ் வரும் சகல நிறுவனங்களினதும் சேவைகளை வடக்கு கிழக்குக்கு வழங்கி வருவதுடன் ஏனைய சகல அமைச்சுக்களினதும் கவனம் குறிப்பாக வடக்கு கிழக்கில் அழிவடைந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதிலேயே செலுத்தப்படுகிறது.

அம்மக்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் உற்பத்தி என சகல துறைகளையும் முன்னேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இடம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டங்களும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாட்டின் சகல விவசாய பகுதிகளிலும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குளங்கள், ஆறுகள் புனரமைக்கப்படுவதுடன் நன்னீர் மீன்பிடித் தொழிலுக்கான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலுள்ள அரச கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கிழக்கிலுள்ள துறைமுகங்கள் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகம் என்பன மீள புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் பாதிப்புகள் வடக்கு கிழக்கை மட்டுமன்றி நாட்டின் ஏனைய பிரதேச மக்களின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட அலுவல்கள், தொழில் துறைகள், வர்த்தக நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் என சகலதும் பாதிக்கப்பட்டன.

ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் அச்சமும் சந்தேகமும் தொடர்ந்தன. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சகல பிரதேச மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய தொழில் செய்யக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு நிலையான ஒரு அரசாங்கமாக திகழ்கிறது.

அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் முதற் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மஹிந்தசிந்தனை எதிர்கால திட்டம் இரண்டாவது பாரிய கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்த ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும்.