2012-02-04

  அபிவிருத்தியின் சிகரமான தேசத்திற்கு மகுடம்

அபிவிருத்தியின் சிகரமான தேசத்திற்கு மகுடம்

இலங்கை தற்பொழுது பல்வேறு துறைகளில் பாரிய அபிவிருத்திகளை கண்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் பல பெயர்களில் இந்த அபிவிருத்தி பணிகள் நாட்டு மக்களின் நலன் கருதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் உற்பத்தித் துறையின் வளர்ச்சி அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகள், எதிர்கால இளம் சந்ததியினருக்கான சிறந்ததொரு எண்ணக்கருவை ஏற்படுத்திக்கொடுத்தல், துரித அபிவிருத்திகள் போன்ற பல்வேறு நோக்குடன் வருடந்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசத்திற்கு மகுடம்’ என்ற பெயரில் அரசாங்கம் பாரிய கண்காட்சி மற்றும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்து வருகின்றது.

இந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண வழிகாட்டலில் ஆறாவது தடவையாக நடைபெறவுள்ள ‘தேசத்திற்கு மகுடம்’ என்ற இக் கண்காட்சி இம்முறை வட மத்திய மாகாணத்திலுள்ள மிகவும் புராதன பிரதேசங்களில் ஒன்றான அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு நடைபெறவுள்ள இக்கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு மொனராகலை மாவட்டத்தின் புத்தலயில் சுமார் 160 ஏக்கர் நிலப்பரப்பிலேயே இந்தக் கண்காட்சி இடம்பெற்றன. இம்முறை சுமார் 600 ஏக்கர் பாரிய விஸ்தீரணமான நிலப்பரப்பில் கண்காட்சி இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

கண்காட்சியை முன்னிட்டு இந்தப் பிரதேசத்தில் சுத்திகரிப்பு, அபிவிருத்தி, புனரமைப்பு, புனர்நிர்மாணம், வீதி அபிவிருத்தி, சுத்தமான குடிநீர் விநியோகம், வீடு அபிவிருத்தி, மின் விநியோக நடவடிக்கைகள், மின் விளக்கு அலங்காரங்கள், சமய வழிபாட்டு ஸ்தலங்கள் அபிவிருத்தி போன்ற பல்வேறு பட்ட பாரிய அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றன.

அனுராதபுரம் மாவட்டத்தின் சகல துறை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென மாத்திரம் இம்முறை 22,000 மில்லியன் ரூபா நிதியை அராசங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சுமார் ஐந்து இலட்சம் சதுர மீற்றர் நிலப்பரப்பில் சகல துறைகளையும் சார்ந்த சுமார் 3500 கூடங்கள் கண்காட்சி பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்களும், அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறையினர் தத்தமது துறையின் செயற்பாடுகளை, திறமைகளை, உற்பத்திகளின் பயன்பாட்டை வெளிக் காண்பிக்கும் வகையில் சிறந்த முறையில் ஒவ்வொரு காட்சி கூடங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இம்முறையும் அனைத்து பல்கலைக்கழகமும் இக்கண்காட்சியில் பங்குகொண்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பாடசாலை மாணவ, மாணவிகள் தமது சிறந்த வெளிப்பாடுகளை இதன்போது காண்பிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக இன்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கவுள்ள இக்கண்காட்சி இன்று இரவு 10.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

நாளை 5 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்க தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சீருடையில் வரும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களும் இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிட முடியும் என்றும் ஏனையோர் நுழைவாயிலில் தேசத்திற்கு மகுடம் சின்னம் பொறிக்கப்பட்ட 20 ரூபா பெறுமதியான தேசிய லொத்தர் சபையின் அபிவிருத்தி சீட்டை பெற்றே நுழைய முடியும் என்று கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழு செலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளருமான உதய ரஞ்சித் செனவிரத்ன குறிப்பிட்டார்.

கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், குடிநீர், மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில், பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அநுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரு புதிய ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் கிராமங்களை இணைக்கும் வகையில் முன்று பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர நகர்புறத்திலிருந்து கண்காட்சி பூமி வரையான பகுதிக்கும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இம்முறையில் கண்காட்சியில் அதிகளவிலான கூடங்கள் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படை, சிவில் பாதுகாப்பு படை என்றும் தலா பத்து ஏக்கர் வீதம் ஒதுக்கப்பட்டு காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படைப் பிரிவினரும் தங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள், யுத்த மன்றும் கனரக கவச வாகனங்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் போன்றவற்றை காட்சிக்கு வைத்துள்ளனர்.

அத்துடன் ஒவ்வொரு படைப் பிரிவினரும் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதுடன், தாம் அன்றாடம் முன்னெடுக்கும் செயற்பாடுகள், பொதுமக்களை, பாதுகாத்தல், மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றை காண்பிக்கவுள்ளனர். படையினரின் சாகசங்களே கடந்த காலங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளை மிக குறுகிய காலத்தில் முறியடித்த படைவீரர்கள் புலிகளிடமிருந்து மீட்டெடுத்த கனரக ஆயுதங்கள், தாக்குதல் படகுகள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் காட்சிக்கு வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

விவசாய, கல்வி, சுகாதார, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டுத் துறை, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளுக்கு இம்முறை அதிகூடிய பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய திணைக்களத்தின் உற்பத்தி, பயிர் செய்கை, போன்றவற்றுக்காக செயல் முறையுடன் 10 ஏக்கர் நிலப்பரப்பு தெற்கு செய்கை நடவடிக்கைகளுக்கும் 300 ஏக்கர் நிலப்பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும், 30 ஏக்கர் நிலப்பரப்பு கால்நடை வள திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சும் அதன் கீழுள்ள இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் இம்முறையும் சிறந்த முறையில் தத்தமது காட்சி கூடங்களை அமைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

26 அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இம்முறை கண்காட்சியில் பங்குகொள்கின்றன.

வானொலி, தொலைக்காட்சி, கூடங்களில் நேரடி ஒலி, ஒளிபரப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு போன்றன நேரடியாகவும் செயல் முறையிலும் காண்பிக்கப்படவுள்ளன.

கடந்த வருட கண்காட்சியில் ஊடக வலயத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்ட லேக் ஹவுஸ் நிறுவனம் இம்முறையும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகப்புத் தோற்றத்தைக் கொண்டதான காட்சி கூடம் ஒன்றை அமைந்துள்ளது.

செய்தி சேகரிக்கும் முறை, பக்க வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுமுறை, அச்சிடும் முறை போன்றவற்றை செயல் முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அச்சு இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி பணிகள்

மாவட்ட அபிவிருத்தியின் மகுடமாக விளங்கும் ‘தேசத்திற்கு மகுடம்’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு பாரிய அபிவிருத்தி பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

கடன் வசதி

அரச மற்றும் தனியார் வங்கிகளின் பூரண பங்களிப்புக்களுடன் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி

அநுராதபுரத்தின் சகல பிரதேசங்களுக்கும் குடிநீர் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு இறுதிக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படவுள்ளது இதற்கென 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.

சுகாதாரம்

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்திரசிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி

கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாரிய வீதிகள் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், செய்யப்பட்டு வருகின்றன.

வீதி அபிவிருத்தி பணிகளுக்கு மாத்திரம் 6400 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் செலவிடவுள்ளது. அனுராதபுரம் – புத்தளம், அநுராதபுரம் – தம்புள்ள, திருகோணமலை – அநுராதபுரம், யாழ்ப்பாணம் – அநுராதபுரம், மற்றும் மன்னார் – அநுராதபுரம் ஆகிய பிரதான வீதிகளே நவீன முறையில் விஸ்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மின்சாரம்

மின்சாரம் துறை மேம்பாட்டுக்கென 1020 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் மின் விநியோகம் வழங்கப்படவுள்ளன.

வருடந்தோறும் சிறந்த முறையில் மாவட்டம், மாவட்டமாக தேர்ந்தெடுக்க்பபட்டு நடத்தப்பட்டு வரும் இக்கண்காட்சி, பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் புத்தி ஜீவிகள், துறைசார் நிபுணர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக அமையும் என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஏற்பாட்டுக்கு குழுவின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்ன ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் சுமார் 30 தொடக்கம் 40 இலட்சம் வரையிலான மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தக் கண்காட்சியின் மூலம் அநுராதபுரம் மாவட்டம் மகுடம் ஆகும் என்பதே அந்த மாவட்ட மக்களின் நம்பிக்கையாகும்.