2012-02-04

  ஆசியாவின் ஆச்சர்யத்தை நோக்கிய

ஆசியாவின் ஆச்சர்யத்தை நோக்கிய

இலங்கையின் எழுச்சிப் பயணம்

இலங்கை சுதந்திரக் காற்றை சுவாசித்து இன்றுடன் 64 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இதில் அரைவாசி வருடங்கள் இன மோதலிலும் இனவாத கலவரங்களிலுமே கடந்து சென்றன. சகல முரண்பாடுகளும் தீர்ந்து அமைதியான சூழலிலே இம்முறை நாம் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

லீhடு சுதந்திரமடைந்த பின் 3 பிரதான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஜனநாயகம், சமூக நியாயத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இன ரீதியான பிரச்சினைக்கு தீர்வுகாணல் என்பனவே அவையாகும். நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் இந்த சவால்கள் எந்தளவு நிறைவேறியுள்ளன? அதற்குத் திருப்திகரமான பதில் வழங்குவது இயலாது. சிலசில முன்னேற்றங்களை எட்டியிருந்தாலும் முழுமையாக எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை.

சுதந்திரத்திற்குப் பின் ஆட்சி செய்த தலைவர்கள் பலரும் இந்த சவால்களை நனவாக்க முயற்சித்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலே அதற்கு உண்மையான தலைமைத்துவம் வழங்க முடிந்தது

நாட்டின் எதிர்கால வெற்றிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியம். யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை எட்டி வருகிறோம்.

30 வருட பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு செலவிடப்பட்ட பெருமளவு நிதி இன்று அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் பொருளாதார முன்னேற்றத்தை விட சமூக முன்னேற்றத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் பொருளாதார முன்னேற்றத்தை எட்டாது சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. அதற்காக பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இதனடிப்படையில் அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. வீதி அபிவிருத்தி வருடாந்தம் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சகல கிராமங்களிலும் கொங்கிaட் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பாலங்கள், வடிகாலமைப்பு, என சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படுகிறது அதிகமான வீதிகள் காபட் இடப்படுகின்றன.

இது தவிர ஒவ்வொரு கிராமத்தின் அபிவிருத்திக்காகவும் இந்த வருடத்தில் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திவிநெகும திடத்தினூடாக பாரிய பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுவரும் அதேவேளை மனைப்பொருளாதாரத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அடித்தளமிடப்பட்டு வருகிறது. பொருளாதார அபிவிருத்திக்கு இதனூடாக பாரிய அடித்தளமிடப்படுகிறது.

இவ்வளவு காலமும் சரியான பாதையில் செல்லாது தவறான அரசியல் முடிவுகள் எட்டப்பட்டதாலே கடந்த காலங்களில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டன.

சுதந்திரத்தின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பேசினால் மகாவலி திட்டத்தை தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் கிடையாது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி, துறைமுகம் விமான நிலையம் என்பன நிர்மாணிப்பது பற்றி கவனம் செலுத்தப்படவில்லை.

தற்பொழுதுள்ள அனைத்தும் வெள்ளைக்காரன் தந்தவையே. காலனித்துவ ஆட்சியின் பின்னரும் அதே ரயில் பாதைகளே காணப்பட்டன.

இவை அனைத்தும் 2005 ல் முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை திட்டத்தின் பின் முழுமையாக மாற்றமடைந்தது. நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம், நீர்ப்பாசனத் திட்டங்கள் என சகல விதமான பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன.

நுரைச்சோலை, கெரவலப்பிடிய மின் உற்பத்தித் திட்டங்கள் நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு மேல்கொத்மலை மின் உற்பத்தித் திட்டத்தினூடாக இம்மாத முடிவுக்குள் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட உள்ளது. பொருளாதார முன்னேற்றம், முதலீடு எதிர்கால மின்சக்தி தேவை என்பவற்றைக் கருத்திற்கொண்டு தூரதிருஷ்டியுடன் இவை ஆரம்பிக்கப்பட்டதை மறுக்க இயலாது.

மறுபக்கம் ஹம்பாந்தோட்டை, ஒலுவில் துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றினூடான பலன்களை எமது நாடு ஓரிரு வருடங்களில் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இதனுடன் இணைந்ததாக கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மத்தல விமான நிலைய பணிகளும் துரிதமாக இடம்பெற்று வருகிறது. உள்ளக விமானச் சேவைகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சீபிளேன் சேவைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் போக்குவரத்துத் துறையிலும் மிகப்பெரிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. கொழும்பு – மாத்தறை இடையிலான கரையோர ரயில் பாதை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் ஏப்ரல் நடுப் பகுதியில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு இருந்து மாத்தறைச்குச் செல்ல முன்னர் 3 1/2 முதல் 4 மணித்தியாலயங்கள் பிடித்தது. இந்த தூர எல்லை 2 1/4 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்படும். பயணங்களில் விரயமாகும் மனித நேரம் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தோடு யுத்தத்தினால் அழிவடைந்த வடபகுதிக்கான ரயில் பாதையை மீளமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடந்த கால பசுமையான நினைவுகளை சுமந்து மீண்டும் யாழ்தேவியில் பயணிக்கும் கனவு 2014 ல் நிறைவேறப்போகிறது. மறுப்பக்கம் கதிர்காமம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. குருணாகலுக்கும் ஹபரணைக்குமிடையில் புதிதாக ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூற்று அறிக்கையும் தயாரிக்கப்படுகிறது.

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையும் மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக இழுத்தடித்த இந்த திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி நிறைவடைந்துள்ளது.

கொழும்புக்கும் காலிக்குமிடையிலான நெடுஞ்சாலை நிறைவடைந்து போக்குவரத்து ஆரம்பித்துள்ளதோடு மாத்தறை வரையான நிர்மாணப் பணிகள் துரிதமாக நிறைவுசெய்யப்பட்டு வருகிறது. இந்தப் பாதை ஹம்பாந்தோட்டை வரை நீடிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு - கண்டி, கொழும்பு கட்டுநாயக்க நெடுஞ்சாலை பணிகளும் துரிதமாக இடம்பெற்று வரும் அதேவேளை கொங்கிaட் தூண்களின் மேலும் மேம்பாதை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் துரித பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் சீரான பாதைக் கட்டமைப்பு இன்றியமையாததாகும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் முன்னேற்றத்தில் வெளிநாடு முதலீடுகள் மிக முக்கியமானவை. யுத்த சூழலில் இங்கு முதலிடவோ இலங்கைக்கு வரவே வெளிநாடுகள் தயக்கம் காட்டின. யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடு முதலீடுகள் அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒருபோதுமில்லாத அளவு அதிகரித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் 6,54,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். ஆனால் 2011ல் இந்தத் தொகை 8,50,000 ஐ தாண்டியது. கடந்த ஜனவரியிலும் சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இலங்கை வரலாற்றில் 2011 ஆம் ஆண்டே அதிகூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தத் தொகை 2012இல் 9 இலட்சத்தையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதியான சூழல் மட்டுமின்றி முதலீட்டாளர்களுக்குரிய வசதிகளும் அளிக்கப்பட்டாலே அவர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு விரும்பி வருவர். அந்த வகையில் மின்சாரமும் முக்கிய இடம் வகிக்கிறது. தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை மட்டுமே மின் துண்டிப்பு அமுல் படுத்தாத ஒரே நாடாகும். தற்பொழுது சுமார் 90 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருட முடிவுக்குள் சகலருக்கும் மின்சார வசதி அளிக்க தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா, இந்தியா அடங்கலான பல நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

ஹோட்டல் துறையிலும் அதிகளவு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக பேணப்பட்டு வருகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது காணப்படுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரதிருஷ்டியான பொருளாதார கொள்கைகளே காரணம் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டு நிதிக் கையிருப்பும் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

உள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கவும் வெளிநாட்டு இறக்குமதிகளை மட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனூடாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை எமது நாட்டுக்கு ஏற்படாது எமது நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. யுத்தம் முடிவு அடைந்து நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வரும் நிலையில் இந்த இலக்கை எம்மால் மீண்டும் எட்ட முடிந்துள்ளது. தற்பொழுது வெளிநாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்காக வலயங்கள் அமைக்கப்பட்டு அங்கு ஏற்றுமதிக்கு உகந்த நெல் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சோள பயிர்ச்செய்கை, பால் உற்பத்தி என்பவற்றிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு பல்வேறு வெற்றிகளை அடைந்து வரும் எமது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் பலவும் புலிகளுடன் பல்வேறு மட்ட பேச்சுக்கள் நடத்தினாலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. இன்று பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களில் 7 ஆயிரம் பேரே மீள்குடியேற்றப்பட வேண்டி உள்ளனர். வரலாற்றில் ஒருபோதுமில்லாத அளவில் வடக்கு எழுச்சிபெற்று வருகிறது.

இந்த நிலையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பல்வேறுபட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அவற்றை அமுல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. மறு பக்கம் தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. வெளியில் எவ்வளவு தான் பேசினாலும் இறுதித் தீர்வு பாராளுமன்றத்தினூடாகவே எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாராலும் வெல்ல முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்திற்கு முடிவு கட்டியது போல இனப்பிரச்சினைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக்கு காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்தது. ஆனால் 2009 மே 18 ஆம் திகதி பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடே நாடு உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசித்தது. அதேபோன்று நாட்டில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட்டு அனைத்து இன மத மக்களும் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழும் காலம் வெகுதூரமில்லை.

அந்த இனிய நாளுக்காக இந்த சுதந்திர தின நாளில் பிரார்த்திப்போம்.