இயற்கை எழில்மிக்க அழகிய நாடு தான் இலங்கை. நாலாபுறமும் கடலால்
சூழப்பட்டிருக்கும் ஒரு தீவாக விளங்கும் இந்நாடு அதற்கேயுரிய பல தனித்துவப் பண்புகளை
தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
இத்தீவின் அமைவிடமும், அதன் இயற்கை சுவாத்தியமும் சேர்ந்து வருடம் முழுவதும்
உயிர்வாழ்வதற்குப் பொருத்தமான நாடு என்ற பெருமையையும் இத்தீவுக்குப் பெற்றுக்
கொடுத்து இருக்கின்றது.
அத்தோடு பலவிதமான இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகவும் இத்தீவு
விளங்குகின்றது.
சிறப்புற்று விளங்கும் இந்நாடு சுதந்திரமடைந்து இன்றோடு 64 வருடங்களாகிவிட்டன. 1505
ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் இந்நாட்டில் கால் பதித்ததோடு அந்நிய ஆக்கிரமிப்பு
ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், அதன் பின்னர் பிரித்தானியருமென 443
வருடங்கள் இந்நாடு ஐரோப்பியரின் ஆளுகையின் கீழ் இருந்தன.
இக்காலப் பகுதியில்
இலங்கையரின் வியர்வையும் இரத்தமும் உறிஞ்சிக் குடிக்கப்பட்டன. அத்தோடு நாட்டின்
பெறுமதியான வளங்களும் ஐரோப்பியரால் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தன.
இவ்வாறு சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஐரோப்பியரால் சுரண்டப்பட்ட நாடு தான் 1948 ஆம்
ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. என்றாலும் 2005 ஆம்
ஆண்டுவரையும் இந்நாடு பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சி எதனையும் அடையவில்லை. மாறாக
வளர்முக நாடு என்றும் மூன்றாம் மண்டல நாடு என்றும் தான் அடையாளப்படுத்தப்பட்டு
வந்தது.
ஐரோப்பியரின் ஆளுகையிலிருந்து விடுதலை பெற்று அரை நூற்றாண்டுகள் உருண்டோடிய போதிலும்
அவர்களது செல்வாக்கு நீண்டகாலம் பல துறைகளிலும் நிழாலாகவே காணப்பட்டன. இதேநேரம்
பயங்கரவாதம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும்
சீரழித்துக் கொண்டிருந்தன. இதனால் நாடு தொடர்ந்தும் அதளபாதாளத்தை நோக்கியே நகர்ந்து
கொண்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் தான் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அச்சமயம் நாட்டின் பிரதமராக இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி
வகித்துக் கொண்டிருந்தார். அவர் ஸ்ரீ லங்கா சுதுந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் அபேட்சகராக இத் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.
அப்போது அவர் சுதந்திர இலங்கையின் நேரடி அரசியலில் மூன்று தசாப்தங்களுக்கும்
மேற்பட்ட அனுபவத்தைப் பெற்றவராக விளங்கினார்.
அதனால் அவர் இந்நாட்டின்
சுபீட்சத்தையும், மறுமலர்ச்சியையும் நோக்கமாகவும், இலக்காகவும் கொண்டு தனக்கேயுரிய
தனித்துவமான வேலைத் திட்டத்தை மஹிந்த சிந்தனை என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு
முன்வைத்தார். இது நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம். இதனை நாட்டு மக்கள்
நன்குணர்ந்து மஹிந்த சிந்தனை தேசிய வேலைத்திட்டத்திற்கு ஜனநாயக முறைப்படி ஆணை
வழங்கினார்கள்.
அந்த ஆணைப்படி 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அன்றைய பிரதமரான மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். அன்று முதல்
அவர் மக்கள் ஆணைப்படி செயற்பட ஆரம்பித்தார். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களைச்
செயற்படுத்தத் தொடங்கினார். இதன் பயனாக சுமார் மூன்று தசாப்த காலம் நாட்டைச்
சீரழித்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருந்த பயங்கரவாதத்தைக் குறுகிய காலத்தில்
ஒழித்துக் கட்ட முடிந்தது.
அத்தோடு அச்சம், பீதியுடன் வாழ்வைக் கழிக்கும் நிலமையும் முடிவுக்கு வந்தது.
நாட்டில் எங்கும் எப்போதும், எந்நேரத்திலும் சுதந்திரமாக நடமாடவும் அன்றாட
செயற்பாடுகளில் ஈடுபடவும் கூடிய சூழல் உருவானது. நாட்டில் எவரும் எந்த இடத்திலும்
அமைதியாகவும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நிலமை தோற்றம் பெற்றது.
அத்தோடு நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய
வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் நாட்டின்
மூன்றிலிரண்டு பகுதி கடற்பரப்பில் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலமையே
காணப்பட்டது. அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அன்றாட சுயதொழில்களில் கூட
ஈடுபட முடியாத நிலமையே நிலவியது.
இதேவேளை உல்லாச பயணிகளின் வருகை முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தது. 2005
ஆம் ஆண்டில் சுமார் 4 இலட்சம் உல்லாசப் பயணிகளே இங்கு வந்தனர். இது 2011 ஆம் ஆண்டு
முடிவுறும் போது 9 இலட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்தது.
இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தூர நோக்கின் அடிப்படையில் நாட்டுக்கு
தலைமைத்துவம் வழங்கி வருகின்றார். இதன் பயனாக நாட்டின் சகல துறைகளிலும்
வளர்ச்சியும், மேம்பாடும் ஏற்பட்டு வருகின்றன. இதனை நேரடியாகவே அவதானிக்க
முடிகின்றது.
இந்தடிப்படையில், 2005 ஆம் அண்டில் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக்
காணப்பட்டது. அது 2011 ஆம் ஆண்டில் 8 சதவீதம் வரை அதிகரித்தது. 2005 ஆம் ஆண்டில்
வேலையின்மை 15 சதவீதமாக இருந்தது. அது 2011 ஆம் ஆண்டு முடிவுறும்போது 4 சதவீதம் வரை
வீழ்ச்சி அடைந்து விட்டது. நாட்டின் வறுமை நிலை 2005 ஆம் அணடில் 22.7 சதவீதமாகக்
காணப்பட்டது. அது 2011 ஆம் ஆண்டு முடிவுறும் போது 8.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
2005 ஆம் ஆண்டில் 23 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2011 ஆம் ஆண்டு முடிவுறும்
போது 5.9 :வீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. 2005 ஆம் ஆண்டில் 1247 அமெரிக்க டொலர்களாக
இருந்த தலா வருமானம் 2011 ஆம் ஆண்டு முடிவுறும் போது 2830 அமெரிக்க டொலர்கள் வரை
அதிகரித்துள்ளது.
இவை இவ்வாறிருக்க நாட்டின் நுகர்வுக்குத் தேவையான அரிசியில் ஒரு தொகுதி 2008 ஆம்
ஆண்டு வரையும் வருடா வருடம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது
நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இதன் பயனாக மேலதிக அரிசியில் 7500
மெற்றிக் தொன்னை பஞ்சத்தில் உழன்று கொண்டிருக்கும் சோமாலியாவுக்கு இலவசமாக அனுப்பி
வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
இதேபோல் உழுந்து உற்பத்தியிலும் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது- குரக்கன்
உற்பத்தியில் இவ்வருடம் தன்னிறைவு அடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு திரிபோஷா சத்துணவை இவ்வருடத்தின் பிற்பகுதி முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்ய முடியுமென எதிர்வு கூறப்படுகின்றது. சோளமே இச்சத்துணவின் பிரதான மூலப்
பொருளாகும். கோழி இறைச்சியையும் இவ்வருடம் முதல் ஏற்றுமதி செய்ய முடியுமென
நம்பப்படுகின்றது-
மேலும் இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவிக்
காலத்தில் தான் முதலாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் நுரைச்சோலையில்
அமைக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் இரணடாவது சர்வதேச விமான நிலையம் ஹம்பாந்தோட்டை
மத்தல விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றது- ஹம்பாந்தோடையில் புதிதாக துறைமுகம்
நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை
தென்பகுதிக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது.
திரைப்பட கைத்தொழில்துறைகளை மேம்படுத்தவென முதலாவது டெலி சினிமா கிராமம்
திஸ்ஸமகராமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்நாட்டின் வரலாற்றில் முதற்
தடவையாக உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் விரிவான அடிப்படையில் அபிவிருத்தி
செய்யப்படுகின்றது. குறிப்பாக பாதை கட்டமைப்பை எடுத்துப் பார்த்தால் இப்படியான ஒரு
வளர்ச்சியை இத்துறை முன்னொரு போதுமே கண்டதில்லை. இதேபோல்தான் அரசாங்கம் சுகாதார
சேவையும் மேம்படுத்தப்படுகின்றது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்க
ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவின் சேவை நேரம் இரவு 8.00 மணி வரையும்
நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி
வரையே அரசாங்க ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் இயங்கியமை
குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் 2005 ஆம் ஆண்டின் போது நாட்டின் அரசாங்க சேவையில் சுமார் எட்டு இலட்சம் பேரே
பணியாற்றினர். அது 2011 ஆம் ஆண்டு முடிவுறும் போது, 13 இலட்சம் வரை
அதிகரித்துள்ளது. இதனூடாக அரச துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் விவசாய பொருளாதாரத் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு
வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மொரகஹகந்த
மற்றும் உமா ஓயா நீர்ப்பாசன திட்டங்கள் அடங்கலாக பல நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள்
பல கோடி ரூபா செலவில் செயலுருப்படுத்தப்பட்டு வருகின்றன.
2005 ஆம் ஆண்டின் போது இலங்கையரின் கணனி பாவனை சுமார் ஐந்து சதவீதமாகவே
காணப்பட்டது. அது 2011 ஆம் ஆண்டு முடிவுறும் போது சுமார் 45 சதவீதம் வரையும்
வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு நாட்டின் சகல துறைகளிலும் சுபீட்சமும்,
மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது. அவை நிலையான அபிவிருத்திக்கான உறுதுணையான
அடித்தளங்களாக விளங்குகின்றன. இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபகப்ஷ அவர்களின் தூர
நோக்கின் அடிப்படையிலான தலைமைத்துவமே மூல காரணம்.
ஆகவே சுதந்திர இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவிக் காலம்
இலங்கைக்கு ஒரு பொற்காலம் என்று உறுதிபடக் கூறலாம். அதனால் இந்த யுகம் இந்நாட்டின்
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படும் என்றால் மிகையாகாது.