ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
இந்திய இழுவைப் படகுகளின் ஊடுருவலால் உள்ளூர் மீனவர் பாதிப்பு
இந்திய இழுவைப் படகுகளின்
ஊடுருவலால் உள்ளூர் மீனவர் பாதிப்பு
நிருபமா ராவிடம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு
வடமராட்சி மற்றும் மயிலிட்டி பகுதி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப் படகுகளின்
செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடமராட்சி பகுதி கடற்தொழிலாளர்களும் இடம்பெயர்ந்து வந்து அப்பகுதியில் தொழிலில்
ஈடுபட்டு வரும் மயிலிட்டி பகுதி கடற்தொழிலாளர்களும் இதனால் பல கோடி ரூபா
நஷ்டமடைந்துள்ளதாகவும், இந்திய கடற்தொழிலாளர்களது இழுவைப் படகுகள் வடமராட்சி
கரையிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை மிக அண்மித்த நிலையில் அத்துமீறி
புகுந்து தொழிலில் ஈடுபட்டு தாங்கள் வீசி வைத்திருந்த வலைகளை அறுத்துச்
சென்றுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் சார்பில்
வலிகாமம் வடக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அ. யோகராசா அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து இழுவைப்
படகுகளின் மூலம் தொழில் புரிந்து வருவதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எமது உள்ளூர்
கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் முகங்கொடுத்து வருவதை தான் உணர்ந்து வருவதாகக் கூறிய
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில்
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவுடன் தான் விரிவாகக்
கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் கடற் பிராந்தியத்திற்குள் இந்தியக் கடற்தொழிலாளர்கள் ஊடுருவுவ தால்
இலங்கைக் கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை அது பெரிதும் பாதிப்பதாகவும், இது
தேவையற்ற பகைமை உணர்வுக்கு வித்திடுவதாகவும் நிருபமாராவிடம் தான் விளக்கிக்
கூறியிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப்பிரச்சினையை
இருதரப்பினரும் இணைந்து சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வசதியாக இந்திய மத்திய
அரசுடனும் தமிழக மாநில அரசுடனும் தொடர்புகொண்டு முரண்பாடுகளுக்குள் சிக்கியிருக்கும்
கடற்தொழிலாளர்களது சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்யும்படி தான் அவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், இந்த வேண்டுகோளுக்கு சாதகமான
பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறானதொரு சந்திப்பின் மூலம் இப்பிரச்சினையை நாம் நிரந்தரமாகத் தீர்த்துக்கொள்ள
முடியுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். (ரு – து)