ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
முத்தான மூன்று அவதாரங்கள்
முத்தான மூன்று அவதாரங்கள்
காயத்ரி
யுகம் தோறும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களில் விசேடமாக போற்றப்படுபவை நரசிம்மம், ராம,
கிருஷ்ணா அவதாரங்கள்.
இவ்வுலகை காத்து ரட்சிக்கின்ற பரம் பொருளான ஹரி தூணிலும் இருக்கிறான் துரம்பிலும்
இருக்கிறான் என்று சொன்ன பிரகலாதனின் வாக்கினை உண்மையாக்க எண்ணினார் பெருமாள். தாய்,
தந்தையரைத் தேர்ந்தெடுத்து பூலோக பிறவி எடுக்க அவகாசம் ஏதும் இல்லை. இரண்யனிடம்
இருந்து பிரகலாதனைக் காக்க தூணில் இருந்து ஆவேசமாக வெளிப்பட்டார். வந்தார் வென்றார்
சென்றார் என்பது போல மின்னல் வேகத்தில் வந்து அசுரவதம் செய்து விட்டு மாயமாய்
கிளம்பிவிட்டார். அதனால் தான் ‘நாளை என்பது இல்லை நரம்சிம்மனிடத்தில்’ என்பார்கள்.
எப்போது ஒருவன் தன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டானோ, அப்போதே அவனை ஆட்கொண்டு
அருள்புரிய அவர் ஆயத்தமாகி விடுகிறார்.
இரண்டெழுத்துப் பெயரைச் சொன்னாலே போதும் நாம் செய்த பழி பாவங்கள் அத்தனையையும்
அடியோடு போக்கிடும் திருநாமம் ‘ராமா’ இந்தப் பெயரைச் சொன்னால் நன்மையும் செல்வமும்
உண்டாகும். பிறவிப்பிணி தீரும் என்கிறது பாடல் ஒன்று.
சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்து, வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்த போதிலும்,
தர்மநெறிமுறையையும் சத்தியத்தையும் தன் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த அவதாரமே
ராமாவதாரம்.
தந்தை தசரதர், சிற்றன்னை கைகேயிக்கு கொடுத்த வாக்கினைக் காப்பதற்காக பதினான்கு
ஆண்டுகள் வனவாசம் கிளம்பிய தியாகச் செம்மல் இவர். ‘வேறொரு பெண்ணை சிந்தையாலும்
தொடேன்’ என்று எகபத்தினி விரதத்தைக் கைக்கொண்டு சீதாராமனாக இருந்த ஒழுக்க சீலர்.
மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நமக்காக பின்பற்றிக் காட்டிய அவதாரம்
ராமாவதாரம்.
அதர்மம் தலைதூக்கிய நேரத்தில் தர்மத்தை பூமியில் நிலைநாட்ட வந்த மாபெரும் அவதாரம்
கிருஷ்ணாவதாரம். சிறை வாசத்தில் தாய் தந்தையும் அவதிப்பட, ஒளிந்து மறைந்து
வளர்ந்தவர் கிருஷ்ணர். தர்மம் முற்றிலும் அழிந்துவிட்டதோ என்று அஞ்சிய நேரத்தில்
தர்மதேவனாக வந்தார். போர்க்களத்தில் போர் வீரனாக நின்ற அர்ஜுனன் வில்லினைக் கீழே
போட்டு கலங்கி நின்ற வேளையில், கீதையைச் சொல்லி வழிகாடினார்.
கடமையைச் செய்வது தான் மகிழ்ச்சியைத் தரும் என்று உபதேசம் செய்தார்.
அதர்மம் தர்மத்தை அழிக்க முனைந்தாலும், ஒருபோதும் தர்மம் அழிவதில்லை என்று இம்மூன்று
அவதாரங்களிலும் மகாவிஷ்ணு நிலைநாட்டி இருக்கிறார்.