ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
நிரந்தர சமாதானம் ஏற்படும் வகையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்
நிரந்தர சமாதானம் ஏற்படும் வகையில்
தேர்தலில் வாக்களிக்க வேண்டும்
ஹிஸ்புல்லா
(களுவாஞ்சிகுடி குறூப் நிருபர்)
யுத்தம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் மட்டக்களப்பில் ஏற்பட்ட அழிவுகளை அடுத்துவரும்
6 ஆண்டுகளுக்குள் புனரமைக்க வேண்டுமானால் சாணக்கியமும் திறமையும் உள்ளவர்களை
பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு பொது ஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
கூறினார். மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர்
மேலும் பேசியதாவது:-
மீண்டும் இன வாதத்துக்கும் யுத்தத்துக்கும் இடமளிக்காமல் நிரந்தர சமாதானம் ஏற்பட
வழிவகுக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும். இதுவரை காலமும் இருந்த சுயமாக சிந்தித்து
வாக்களிக்க முடியாத நிலை மாறி தற்போது சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களையும் விரும்பியவாறு தெரிவு செய்யக் கூடியதாகவுள்ளது.
எனவே மட்டக்களப்பு மக்கள் பெறுமதி மிக்க தேர்தலாக இதனை பயன்படுத்த வேண்டும்.
30
ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது மட்டக்களப்பு
மாவட்டமாகும். பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது. தென் பகுதியுடன் ஒப்பிடுகையில்
மிகவும் பின் தள்ளப்பட்டுள்ளது. தெற்கில் 3 மீன்பிடி துறைமுகங்களும் 15 க்கு
மேற்பட்ட இறங்குதுறைகளும் உள்ளன. கிழக்கில் ஒரு துறைமுகமோ அல்லது இறங்கு துறையோ
இல்லை.
40 க்கு மேற்பட்ட நீர்ப்பாசன குளங்கள் தூர்ந்து போயுள்ளன. கல்வி விவசாயம் மீன்பிடி
சுகாதாரம், அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தென் பகுதிக்கு கோடிக்கணக்கான பணம்
செலவிடப்படுகின்றது. மட்டக்களப்பில் இன்னமும் 20 வீதமான பகுதிகளுக்கு மின்சாரம்
இல்லை. பாடசாலைகளில் நவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லை.
வைத்தியசாலைகளில் கட்டில்
வசதியின்றி அரைப்பங்கு நோயாளர்கள் தரையில் தங்கியுள்ளனர். தொழிற்சாலை வசதியோ
வேலைவாய்ப்புகளோ கிடையாது. மேசன் தச்சு பயிற்சிகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகின்றன.
சர்வதேச சந்தைக்கான நவீன பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அங்குல நிலமும்
விவசாயத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். போதிய வளங்கள் இருந்தும் அடிமைகளாகவும்
ஏழைகளாகவுமே வாழ்கின்றோம்.
எனவே 30 ஆண்டு காலத்துள் இழந்தவற்றை எதிர்வரும் 6 ஆண்டு காலத்துள் நிறைவேற்றக்
கூடிய திறமையும் சாணக்கியமும் உள்ளவரை இத்தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்.
மட்டக்களப்பை மிளிர வைக்க வேண்டும் என்ற ஒரே பாதையில் மட்டும் பயணிக்க வேண்டும்.
தமிழ் முஸ்லிம் சிங்கள வேறுபாட்டை மறக்க வேண்டும். தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இன்றி
பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது இவற்றையெல்லாம் தனியே ஒரு சமூகத்தின்
பிரதிநிதியாக மட்டும் இருந்து சாதிக்க முடியாது. பொருத்தமற்றவர்களை தெரிவு செய்தால்
பொருளாதாரத் தையும் பெளதீக வளங்களையும் கட்டியெழுப்ப முடியாது.
இதுவரை காலமும் தமிழ் பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பிரசாரங்களைச் செய்யக் கூடிய
சூழ்நிலை எமக்கு இருக்கவில்லை. 1977 ம் ஆண்டுக்குப் பின் இந்த நிலை மாறி நாம் தமிழ்
பகுதிகளில் பிரசாத்தை செய்கிறோம். அதேபோன்று தமிழ் வேட்பாளர்களும் எமது பகுதிகளுக்கு
வர வேண்டும்.