வவரு. 78 இல. 32

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, February 09, 2010

பனாமா மாநாடு சீர்குலைய காரணம்?

பனாமா மாநாடு சீர்குலைய காரணம்?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆடம்ஸ் குயின்ஸி

லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விழுங்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமாக இருந்தது. தென்னமெரிக்க நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இன்னமும் அடிமை முறையை பின்பற்றி வந்தது.

கியூபாவை விழுங்கிவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது ஸ்பானிய ஆதிக்கத்தில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். விடுதலை பெற்றுவிட்டால் அதை கைப்பற்றுவது சாத்தியமல்ல என்பது அமெரிக்காவின் முடிவு. எனவே, பனாமா மாநாட்டில் பிரிட்டனுடன் தானும் பார்வையாளராக அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி ஆடம்ஸ் குயின்ஸி விரும்பினார்.

மாநாடு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

முதலில் அனுப்பப்பட்டவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார். இரண்டாவதாக அனுப்பப்பட்டவர் கடைசி நாளில் வந்து சேர்ந்தார். தென்னமெரிக்க நாடுகளில் வர்த்தகம் செய்வதற்கு பிரிட்டன் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டது.

பிரிட்டனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. கியூபாவின் விடுதலைக்கு உதவுவது குறித்து முடிவேதும் எடுக்காமலேயே மாநாடு முடிந்தது.

பனாமா மாநாட்டில் சான்டென்டர் நடந்துகொண்ட விதம் பொலிவாருக்கு பிடிக்கவில்லை. தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். பெரு நாட்டில் உள்நாட்டு சண்டை முடிவுக்கு வரவில்லை. அதற்குள் கிரான் கொலம்பியாவில் அதிகாரப் போட்டி தொடங்கிவிட்டது.

எனவே, பொலிவார் மீண்டும் கொலம்பியா தலைநகர் பொகாடோவுக்கு திரும்பினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவான சான்டென்டருடைய போக்கு பொலிவாருக்கு பிடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக தனது தளபதி பயஸ¤க்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு பதவியை ஏற்படுத்தினார்.

இதனிடையே, தென்னமெரிக்க நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈடுபட்டது. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் பொலிவாருக்கு எதிரான ஆட்களை அது அடையாளம் கண்டுபிடித்தது.

இதற்காக ஏஜெண்டுகளை அனுப்பியது. அவர்கள் கிரான் கொலம்பியாவிலும், மற்ற தென்னமெரிக்க நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தினர். அவர்களுக்கு சான்டென்டர் உள்ளிட்ட சிலர் கைக்கூலிகளாகக் கிடைத்தனர்.

கொலம்பியாவை தனியாக பிரித்து தனது தலைமையின் கீழ் கொண்டுவர சான்டென்டர் விரும்பினார். அதுபோல நிகரகுவாவையும், பனாமாவையும் தனித்தனியாக பிரித்து தனித்தனி அரசாங்கம் அமைத்துத் தருவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆசை காட்டியது.

அமெரிக்காவின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் வெற்றிபெற்றன. தான் பெரிதும் நம்பிய சான்டென்டர் தனக்கு துரோகம் இழைத்ததை பொலிவாரால் தாங்க முடியவில்லை. கிரான் கொலம்பியாவுக்கு தனியாக அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •