ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, February 09, 2010
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காய் திகழ்ந்த வங்க நாயகன் ஜோதிபாசு
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காய் திகழ்ந்த வங்க நாயகன் ஜோதிபாசு
ப. மோகன் சுப்ரமணியம்
மத்திய கமிட்டி உறுப்பினர்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
சுதந்திர இந்தியாவின் மேற்கு வங்காளம் வரலாற்று பெருமை மிக்கது என்றால் மிகையாகாது.
வறுமையினாலும், பொருளாதார நெருக்கடியினாலும் முன்னேற்றமடையாமல் இருந்த இம்மாநிலம்
1977ம் ஆண்டு இந்திய மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் பின்னர் மாற்றம்
கண்டது.
இதற்கு மூத்த மாக்சீய சிந்தனையாளர் ஜோதிபாசு முதலமைச்சராக பொறுப்பேற்று இம்
மாநிலத்தை இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றியமைத்த மாமேதை ஜோதிபாசுவின்
மரணம் இந்திய பாட்டாளி மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத
ஒன்று.
இந்தியாவின் மாக்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜோதிபாசு 2010 ஜனவரி
17ம் திகதி கல்கத்தா மருத்துவமனையில் உயிரிழந்தார். உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கு இந்திய மாக்சீய கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச செயலாளர் தோழர் சீத்தாராம்
யெச்சூரி இவரது மரணச்செய்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜோதிபாசு தனது உடலை மருத்துவ ஆராச்சிக்கு கொடுத்திருந்ததால் ஜனவரி 19ம் திகதி இறுதி
ஊர்வலம் நடாத்தி மருத்துவமனைக்கு அவரின் உடல் தானமாக வழங்கப்பட்டது.
1964களில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தத்துவார்த்த நடைமுறை ரீதியான பிளவுகள்
ஏற்பட்ட போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிளவுகள் ஏற்பட்டன.
1964ல் இந்திய
மாக்சீக கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஆரம்பகால உறுப்பினராக
இருந்தவர்களில் தோழர் ஜோதிபாசுவும் ஒருவர். 1964 முதல் 2008ம் ஆண்டு வரை மாக்சீய
கம்யூனிஸ்ட் கட்சியின் அதி உயர் பீடமான அரசியல் குழுவில் அங்கம் வகித்தார். 2008ம்
ஆண்டு முதல் உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்தார்.
இருப்பினும் அவர் இறக்கும்
வரையிலும் இந்திய மாக்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும்
பங்களிப்பு செய்தார். மாக்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் இறுதி
உறுப்பினராவார். இந்திய அரசியலில் இடதுசாரி கொள்கைக்கு வலு சேர்ப்பதில் முக்கிய
பங்கு வகித்தார் ஜோதிபாசு. இந்திய அரசியலில் மிகவும் எழிமையான அரசியல் தலைவராக
கருதப்பட்டார்.
சோவியத் புரட்சிக்கு முன் 1914 ஜுலை 8ம் திகதி அப்போதைய கிழக்கு வங்காளத்தில்
மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர் (இப்போது வங்காள தேசம்) தந்தை வைத்தியர். தாய்
குடும்பத் தலைவராக இருந்தவர். இவரின் பாடசாலை வாழ்க்கை 1920களில் ஆரம்பமானது.
ஜோதீன்திர பாசு என்ற பெயரை ஜோதிபாசுவாக சுருக்கிக் கொண்டார். கிழக்கு வங்காளத்தில்
அமைந்திருந்த சென். சேவியர் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார் (இப்பாடசாலை
பின்னர் ஜனாதிபதி வித்தியாலயமாக மாற்றப்பட்டது). அதன் பின் ஹிந்து பாடசாலையில் கல்வி
கற்று பட்டதாரியாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஆங்கில புலமையில் கெளரவ பட்டம்
பெற்றார்.
1935ம் ஆண்டு சட்டம் தொடர்பான பாரிஸ்டர் பட்டப்படிப்பிற்காக
இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு பொருளாதார விஞ்ஞான பேராசிரியர் ஹொல்ட் லேஸ்கியுடைய
சொற்பொழிவுகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியூடாகவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது புகழ்பூத்த மாக்சீய சிந்தனையாளரும்
எழுத்தாளருமான ராஜனி பாம்டத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது.
அவரின் பிரதான அரசியல் பணியாக இங்கிலாந்தில் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது
இந்திய மாணவர்களை ஒன்றிணைப்பதில் முன்நின்றார். இங்கிலாந்தில் கல்வி கற்றுக்
கொண்டிருக்கும் போதே இந்திய தேசிய இயக்கத்திலும் லீக் அமைப்போடும் தொடர்புகளைக்
கொண்டிருந்தார்.
(நம்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர் எஸ். ஏ. விக்ரமசிங்க இந்த
அமைப்பின் இணைச் செயலாளராக பணிபுரிந்தார்) தோழர் பீட்டர் கெனமன், ஏ.
வைத்தியலிங்கம், பி. கந்தையா போன்றவர்கள் ஜோதிபாசுவின் சமகால போராட்ட சகாக்கள்)
1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் இங்கிலாந்து சுற்று பயணத்தின் போதும் சுபாஸ்
சந்திரபோசின் இங்கிலாந்து பயணத்தின் போதும் அங்கு கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்
பொறுப்பு ஜோதி பாசுவிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்திய தேசிய சபையின் தலைவராக
செயற்பட்டவர் ஜோதிபாசவே.
இந்திய அரசியல் தலைவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது
அவர்களை தொழிற்கட்சி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இவர்தான். இங்கிலாந்தில்
கல்வி கற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவரான புபேஸ்குப்தாதான் இங்கிலாந்து
கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாசு இணைவதற்கு காரணகர்தாவாக இருந்தார்.
1940ல் பாரிஸ்டராக தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், சுதேச ஆண்டு
இந்தியாவிற்கு திருப்பினார். கல்கட்டா உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவு
செய்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டு
நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மாறாக அவர் தேர்தெடுத்தது கட்சியின் முழுநேர
ஊழியராக பணிபுரிந்தார். சோவியத் நட்புறவு சங்கத்தினதும் கல்கத்தாவில் பாசிச விரோத
எழுத்தாளர்களின் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றினார்.
இக் காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோத கட்சியாக தடை
செய்யப்பட்டிருந்ததால் கட்சி அங்கத்தவரான அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பு
கட்சி தலைவர்களுடன் இரகசிய தொடர்புகளைப் பேணுவதாகும். 1944ல் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி புகையிரத தொழிலாளர்களுடன் பணிபுரிய ஆரம்பித்த போது புகையிரத தொழிலாளர்
சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவியேற்று பிரபல தொழிற்சங்கத் தலைவராகவும்
திகழ்ந்தார்.
1946ல் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் வங்காளத்தின் சட்ட பேரவைக்கு
தேர்தெடுக்கப்பட்டார். 1946ம் ஆண்டு முதல் நீண்ட காலம் மேற்கு வங்காள சட்ட சபையின்
எதிர்க்கட்சித் தலைவராக அரும்பணியாற்றியவர். மேற்கு வங்காள மாநில கம்யூனிஸ்ட் கட்சி
செயலாளராக 1953ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை செயல்பட்டார். 1951ம் ஆண்டு அவர்
கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.
1967ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரை மேற்கு வங்காள மாநில சட்ட பேரவை எதிர்க்கட்சி
தலைவராக கடமையாற்றியவர் அதன்பின் 1977ம் ஆண்டுமுதல் மேற்கு வங்காள மாநில
முதலமைச்சராக சுமார் 23 வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்த பெருமை அவரையே சாரும்.
இக்கால கட்டத்தில் மிகவும் புகழ்பூத்த கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கினார். மக்கள்
பிரதிநிதிகள் சபையை கம்யூனிஸ்ட்டுக்கள் எவ்வாறு பயன்படுத்தி தொழிலாளர்களின்
போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பதை இரண்டு சகாப்தங்களுக்கு மேல் செய்து காட்டிய
செயல் வீரர் ஜோதிபாசு.
இவரின் ஆட்சி காலத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு இலட்ச கணக்கான
தொழிலாளர்களுக்கு காணியை வழங்கி அவர்களை சிறு விவசாயிகளாக மாற்றியமைத்த பெருமை
அவரையே சாரும். 2002ஆம் ஆண்டு தானாக பதவி விலகினார்.
1996ம் ஆண்டு தேசிய முன்னணி இந்திய பிரதமர் பதவிக்கு தோழர் ஜோதிபாசுவின் பெயர்
பிரோரிக்கப்பட்டது. ஒருவார கால விவாதத்திற்கு பின் பிரதமர் பதவியை ஏற்பதில்லை என
மாக்சீய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. பிற்காலத்தில் இந்த முடிவு பிழையான
முடிவு எனவும் வரலாற்று தவறு எனவும் ஜோதிபாசு குறிப்பிட்டார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா நாட்டுக்கெதிராக பொருளாதாரத் தடை வகித்தது. உலகம்
பூராகவும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் கியூபாவுக்கு ஆதரவு வழங்குவது எனவும் அவர்களுக்கு
தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரித்து அனுப்புவது எனவும் அதற்கான முதலாவது
கியூபாவுக்கான ஒத்துழைப்பு மாநாடு 1995ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஆரம்பமானது.
இலங்கையிலிருந்து அனைத்து முற்போக்கு சக்திகளும் தனது ஆதரவை வழங்க தீர்மானித்து
கல்கட்டா சென்றனர். ஆசிய பசுபிக் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் சுபா
சந்திரபோஸ் அரங்கில் ஒன்றுக்கூடி தமது ஆதரவை தெரிவித்தனர்.
அன்றைய நாளில் இலங்கை பிரதிநிதிகளுக்கு தோழர் ஜோதிபாசு அவர்கள் முதலமைச்சர்
இல்லத்தில் இராப்போசன விருந்து வழங்கி கெளரவித்தார். அவரின் தோழமை, நட்பு
எம்மையெல்லாம் ஆச்சரிப்படுத்தியது.
இம் மகாநாட்டில் டியூ குணசேகர, வை. பி. சில்வா,
சிவதாசன், டி. தம்பையா, பி. மோகன்சுப்பிரமணியம், வாசுதேவ, நாணயக்கார, டபிள்யு. ஏ.
தர்மதாச உட்பட மாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள் அமைப்பு, மனித
உரிமை அமைப்பு, இளைஞர் அமைப்பு சார்பில் சுமார் 65 பேர் கலந்துகொண்டனர். எம்மை
பொறுத்த வரையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை
போராட்டம் ஓர் முன்மாதிரியாக அமைய வேண்டுமென்பதே.
ஜோதிபாசுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்திய மாக்சீய கம்யூனிஸ்ட்
கட்சியுடன் எமது தோழமையுள்ள அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.